இந்தோனேஷியா ஓப்பன் பேட்மின்டன்: அசத்தல் வெற்றி பெற்ற சிந்து
இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் தொடரின் விறுவிறுப்பான ஆட்டத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார் பிவி சிந்து.
இந்தத் தொடரின், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னால் இருக்கும் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். தாய்லாந்தின் போர்ன்பாவியை நேற்று எதிர்கொண்ட சிந்து, 21- 15, 19- 21, 21- 13 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டார்.
இதன் மூலம் காலிறுதிக்கு முன்னர் இருக்கும் சுற்றுக்கு சிந்து தகுதி பெற்றுள்ளார். வரும் விழாயன் கிழமை அவர், ஜாப்பானின் அயா ஒஹோரியை சந்திக்க உள்ளார். சிந்து, தற்போது உலக அளவில் மகளிர் ஒற்றையருக்கான தர வரிசைப் பட்டியலில் 3- வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான சாய்னா நேவாலும் வரும் வியாழக் கிழமை, இந்தோனேசியா ஓபனின் காலிறுதிக்கு முன்னால் இருக்கும் சுற்றில் விளையாட உள்ளார். இந்தத் தொடரில் பல முன்னணி இந்திய வீரர்கள் பங்கேற்ற போதும், சாய்னாவும் சிந்துவும் தான் ஆறுதலான முடிவுகளை கொடுத்துள்ளனர்.
ஆண்களுக்கான உலக பாட்மிண்டன் தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு இதே நிலைமை தான்.