பெருகும் வாட்ஸ்அப் போலி செய்திகள்- முடக்க திட்டமிடும் ஃபேஸ்புக்

போலியாகப் பரவும் செய்திகளால் ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்அப்-க்கு தற்போது இந்திய சந்தையில் ஒரு பெரும் சிக்கல் உருவாகி வருகிறது.

எந்த வித உறுதிதன்மையும் இன்றி பரப்பப்படும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திபளால் பல கலவரங்கள் கடந்த இரு வாரத்தில் இந்திய அளவில் பல்வேறு இடங்களில் நடந்துள்ளன. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஒரு எச்சரிக்கை அறிக்கையை அனுப்பியுள்ளது.

வாட்ஸ்அப்-க்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிய எச்சரிக்கையில், வாட்ஸ்அப் செயலி மூலம் பெரும் அளவிலான மக்கள் கூட்டத்துக்கு பரப்பப்படும் தவறான தகவல்கள் என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அவற்றை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதில் கூறுகையில், கடந்த இரு வாரங்களில் ஃபேக் நியூஸ் மூலம் பரப்பப்பட்ட கலவரங்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த ஃபேக் நியூஸ் விஷயத்தை அரசு, மக்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சேர்ந்து எதிர்கொண்டால் தான் சரி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசிடமிருந்து இந்த எச்சரிக்கையை அடுத்து, 50,000 டாலர்கள் செலவு செய்து ஃபேக் நியூஸ் விஷயத்துக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க வாட்ஸ்அப் முயற்சி எடுத்துள்ளதாம். இந்த முதலீடு மூலம் போலியான மற்றும் உண்மையான செய்திகள் என இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிய பிரேசில் மற்றும் மெக்சிக்கோ செய்தி நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>