குடியேற்ற நடவடிக்கை- அமெரிக்க சுதந்திர தேவி சிலை மீது போராட்டம்
அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் இருக்கும் சுதந்திர தேவி சிலை மீது ஏறி அமெரிக்க சுதந்திர நாளான நேற்று, ட்ரம்பின் அகதிகள் குடியேற்ற விதிமுறைகளுக்கு எதிராகப் பெண் ஒருவர் போராடியுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம், அதகிகள் குடியேற்றத்துக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பெண் இந்தப் போராட்டத்தை அரங்கேற்றினார் என்று கூறப்பட்டுள்ளது. டொனாட்டு ட்ரம்ப், அதிபராக பதவியேற்றதிலிருந்து, வேறு நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ‘சட்டத்துக்கு புறம்பாக’ வருபவர்கள் மீது எந்த வித தயவு தாட்சணியமும் காட்டப்படாது என்று கூறி வந்தார்.
இதற்காகவே புதிய சட்ட விதிகளை வகுத்தார். அதன்படி, ‘அகதிகளாக வரும் வெளிநாட்டினர் எல்லையிலேயே பிடிக்கப்படுவர். குழந்தைகள் மற்றும் பெண்கள் ஓர் இடத்தில் வைக்கப்படுவவர். ஆண்கள், இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள மையங்களில் அடைக்கப்படுவர். அனைவரும் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறையால் குழந்தைகள் அவர்களின் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்படுகிறார்கள். இது பெரும் அநீதி என்று பரவலாக கூறப்பட்டது. இதையடுத்து, ‘குழந்தைகளை பிரிக்கும் நடைமுறைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். மற்ற விதிகள் பின்பற்றப்படும்’ என்று ட்ரம்ப் அரசு தெரிவித்தது.
இருந்தும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்பட்டே வைக்கப்பட்டு இருக்கிறார்கள், குடும்பம் மொத்தத்தையும் சிறையில் அடைப்பது போல அடைத்து வைக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைக்கு எதிராக அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலை அருகில் மேற்குறிப்பிட்ட சட்டத்துக்கு எதிராக ‘ரைஸ் அண்டு ரெசிஸ்ட் என்.ஒய்.சி’ என்ற அமைப்பு போராடியது.
இதில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர் சுதந்திர தேவி சிலை மீது ஏறி பதாகைகளை விரித்துப் போராடினார். இதையடுத்து, பொது மக்கள் யாரும் வராதபடி சுதந்திர தேவி சிலை மூடப்பட்டது. பின்னர், பெண்ணை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றது.