விக்ரம் வேதா 100வது நாள் கொண்டாட்டம்
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி - மாதவன் ஆகியோர் நடித்திருந்தனர் இந்த படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம், 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் - காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா' படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் விஜய் சேதுபதி பேசும் போது, "எனக்கு தெரிந்தவரை, தர்மதுரை படத்திற்கு பிறகு, எனது நடிப்பில் 100 நாட்களை கடந்து ஓடும் படமாக `விக்ரம் வேதா' அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும், பல்வேறு விதத்தில் பாராட்டிய படம் தான் `விக்ரம் வேதா'. ஆனால் இந்த படத்தால் சுயநலமாக நான் அடைந்தது என்னவென்றால், மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன். என்னை வேறுவிதமாகக் காட்டி மக்களிடம் கொண்டு சேர்த்த புஷ்கர் - காயத்ரிக்கு நன்றி. அதே போல் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வரலாறு என்று ஒன்று எழுதினால் அதில் இந்த படம் முக்கிய இடத்தில் இருக்கும்" என்றார்.