அமெரிக்கா- பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளின் சோகக் கதை!

உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்கா, மெக்ஸிகோ எல்லை தாண்டி வருபவர்களை டிரம்ப் அரசு தடுத்து வருகிறது.

மெக்ஸிகோ, ஹோண்டுராஸில் நடந்து வரும் வன்முறைக்கு தப்பி அநேகர் பல்வேறு விதங்களில் பயணித்து அமெரிக்கா நோக்கி வருகின்றனர்.

அமெரிக்க எல்லையில், பெற்றோரிடமிருந்து இளவயது பிள்ளைகள் மற்றும் குழந்தைகள் பிரிக்கப்பட்டனர். இதற்கு அமெரிக்காவுக்குள்ளும், வெளியிலும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தது. பின்னர், குழந்தைகளை பிரிப்பதை நிறுத்தும் நிர்வாக ஆணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட ஒரு 15 வயது பெண், தாங்கள் தங்க வைக்கப்பட்ட முகாம் குறித்து சியாட்டில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த உறுதிமொழி பத்திரத்தில் பகிர்ந்து கொண்டுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

'ஜி' என்று குறிக்கப்படும் அந்த இளம்பெண், எல் சால்வெடர் நாட்டிலிருந்து வந்தவர். தாயிடமிருந்து அவரை அமெரிக்க நிர்வாகம் பிரித்து, முகாமில் அடைத்தது.

“அடைக்கப்பட்ட அறைக்கு ஜன்னல் கிடையாது. அறை கம்பிகளால் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூண்டிலும் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட 20 பெண் பிள்ளைகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

மூன்று வயது பெண் குழந்தை கூட அங்கு இருந்தது. அறை எப்போதும் குளிரூட்டப்பட்டிருந்ததால் ஐஸ் பெட்டி போல் அதிக குளிராக இருந்தது. ஒரு படுக்கை விரிப்பும், அலுமினிய போர்வையும் கொடுக்கப்பட்டது.

நெருக்கியடித்து படுக்க வேண்டியது இருந்தது. அதிகாலை 4 மணிக்கு காவலர்கள், படுக்கை விரிப்பினை உதைத்து, பெண் பிள்ளைகளை எழுப்பி, எண்ணிக்கையை சரி பார்த்தனர். சரியான உணவு, உறக்கம் இல்லை.

அங்கிருந்து யாரையும் தொடர்பு கொள்ளவும் அனுமதி இல்லை. மூன்று நாட்கள் இவ்வாறு அடைபட்டிருந்தேன்" என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.

2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள், இளம் பிள்ளைகள் இவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தனர். சகிப்புத்தன்மை இல்லாத இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தோன்றியதையடுத்து, அதிபர் டிரம்ப் நிறுத்தியுள்ளார்.

More News >>