பசுமை வழிச்சாலையின் பலன் அறியாமல் எதிர்க்கக் கூடாது- உயர் நீதிமன்றம்
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தின் பயன்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல், எதிர்ப்பு கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, பசுமை சாலை திட்டம் குறித்து நீதிமன்ற அறையில் இருந்த வழக்கறிஞர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
பின்னர், வழக்கறிஞர்கள் இந்த திட்டத்தை வரவேற்று கருத்து தெரிவித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, இரு மாநகரங்களுக்கு இடையே உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் இந்த திட்டம், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமையவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகவும் வாய்ப்பளிக்கும் என்றார்.
மேலும், திட்டத்தின் பலனை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பொது கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.