எட்டு வழிச்சாலை பணிகள்... தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதைற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான தர்மபுரி மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு இந்த மனுவையும் மாற்ற பரிந்துரை செய்தார்.
அப்போது முறையிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வழக்கு முடியும் வரை நிலம் கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதேபோல், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக, வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு, நீதிபதிகள் சிவஞானம், ஷேஷசாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரம் குறித்து, ஜூலை 12-ஆம் தேதிக்குள் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுமக்கள் கருத்து கேட்காமல் நிலம் கையகப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரிய மனுவை, நீதிபதி ராஜா தள்ளுபடி செய்தார்.