வெளியேறிய பிரேசில் அணி! கெத்து காட்டிய பெல்ஜியம்!
ஃபிபா உலக கோப்பை 2018 ஆம் ஆண்டுக்கான நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணியும் பெல்ஜியம் அணியும் மோதின. இந்தப் போட்டியில் பெல்ஜியம், பிரேசிலை 2 - 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலக கோப்பையை இந்த முறை கைப்பற்றப் போகும் அணி என்று பலரால் ஆருடம் கூறப்பட்டது பிரேசிலைத் தான். அதற்கு ஏற்றாற் போல் மெர்சல் ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தி வந்தனர். ரவுண்டு ஆஃப் 16 வரை தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய பிரேசில், நேற்று பெல்ஜியத்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் கண்டிப்பாக வென்று அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆட்டம் தொடங்கிய 13 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் ஃபெர்னாண்டினோ ஒரு ‘ஓன்-சைடு கோல்’ போட்டுவிட்டார். இதனால், பெல்ஜியத்துக்கு லீட் கிடைத்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடி பெல்ஜியம், 31 வது நிமிடத்தில் இன்னொரு கொலை அடித்தது. இந்த முறை அந்த அணியின் கெவின் டி பிரைன் லீட் கொடுத்தார்.
முதல் பாதி முடிவடையும் போது பிரேசில் அணி கோல் ஏதும் இல்லாமலும், பெல்ஜியம் 2 கோல்களுடனும் முன்னிலை வகித்தது. விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இரண்டாம் பாதியில் களமிறங்கிய பிரேசில் தொடர்ந்து கோல் போட முயற்சி செய்தது. 76 வது நிமிடத்தில் சப்ஸ்டிட்டியூட்டாக வந்த ரெனாட்டோ அகஸ்டோ, பிரேசில் அணிக்காக ஒரு அட்டகாசமான கோல் அடித்தார்.
துவண்டிருந்த பிரசேயில் அணி வீறுகொண்டு எழுந்து தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்தது. ஆனால், கடைசி வரை 1 கோல் மட்டுமே அடித்த நிலையில் ஆட்டத்தை முடித்தது பிரேசில். இதனால் பெல்ஜியம் அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வரும் செவ்வாய் கிழமை பிரான்ஸ் அணிக்கு எதிராக அரையிறுதியை விளையாடும் பெல்ஜியம்.