பத்திரிக்கையாளர்களை உடனே விடுவிக்கும்படி பல்வேறு நாடுகள் மியான்மர் அரசுக்கு வலியுறுத்தல்
மியான்மரில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் அந்நாட்டை வலியுறுத்தி வருகின்றன.
ராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளானதால் மியான்மரில் உள்ள ராக்கீன் மாகாணத்தை சேர்ந்த ரோஹிங்கிய முஸ்லீம்கள் வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அதனை வெளி உலகத்திற்கு கொண்டுவர பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் மியான்மரில் இருந்தபடி தொடர்ந்து செய்திகளை சேகரித்து வந்தனர்.
சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 2 பத்திரிகையாளர்களையும், அவர்களுக்கு உதவியதாக ஒரு காவலரையும் யாங்கூன் போலீசார் நேற்று கைது செய்தனர். பத்திரிகையாளர்கள் கைது என்ற செய்தியை அறிந்ததும் பல்வேறு நாடுகள் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்கள் உடனே விடுவிக்கபட வேண்டும் என மியான்மர் அரசுக்கு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகிறது.
எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸ்ன் கோரிக்கை விடுத்துள்ளார். சுவீடன் இங்கிலாந்து வங்காளதேசம் போன்ற நாடுகளும் இதே கருத்தினை வலியுறுத்தி வருகின்றன.
இது பத்திரிக்கை சுதந்திரம் மீது நடத்தப்பட்ட தாக்குதல். தங்களது செய்தியாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் மியான்மர் அரசை வலியுறுத்தி உள்ளது.