தமிழ்நாட்டில் 4,000 கோடி ரூபாய் மதிப்பில் சியட் டயர் தொழிற்சாலை
By SAM ASIR
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் - மதுரமங்கலத்தில் 'சியட்' டயர் நிறுவனம், வாகனங்களுக்கான டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. அடுத்த பத்தாண்டுகளில் 4,000 கோடி ரூபாய் இதற்கென முதலீடு செய்யப்படும்.
தமிழகத்தை தொழில்துறையில் முதல் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக அரசால் நடத்தப்பட்டது. இதில் 2.42 லட்சம் கோடி முதலீட்டிற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அடுத்த ஆண்டும் ஜனவரி மாதம் 23 மற்றும் 24-ம் தேதிகளில் அதைப்போன்ற இரண்டாவது மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் ஏற்பாட்டிற்கென தற்போது தமிழக முதலமைச்சர் 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அந்த மாநாட்டின் முன்னோட்டமாக செய்யப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக தொழில்துறை கூடுதல் தலைமை செயலர் கு.ஞானதேசிகனும் சியட் நிர்வாக இயக்குநர் அனந்த் கோயங்காவும் கையெழுத்திட்டனர். இந்த தொழிற்சாலையின் மூலம் 1,000 பேர் நேரடியாகவும், 3,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர் என்று கூறப்படுகிறது.