குகையில் சிக்கியுள்ள சிறுவர்களுக்கு ஃபைனல் பார்க்க அழைப்பு
By SAM ASIR
தாய்லாந்தில் தாம் லுவாங் என்ற குகைக்குள் இளம் கால் பந்தாட்ட வீரர்களும் பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் மீட்கப்படும் செய்திக்காக உலகமே காத்திருக்கிறது. இந்நிலையில், அந்த வீரர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் தலைவர் கியானி இன்ஃபென்டினோ, ஜூலை 15-ம் தேதி நடைபெற உள்ள கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டியை காண வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தாய்லாந்தின் வட பகுதியில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. 16 வயதுக்குட்பட்ட இளம் கால்பந்தாட்ட வீரர்கள் 12 பேரும் அவர்கள் பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங் என்பவரும் ஜூன் 23-ம் தேதி, அப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது பெய்த கனமழையால், குகைக்குள் தண்ணீர் நிரம்பி உள்ளே சென்றவர்கள் வெளியே வர இயலாமல் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பிறகு, அவர்கள் குகையினுள் சிக்கிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை மீட்கும் முயற்சி தொடங்கியது.
இளம் கால்பந்தாட்ட வீரர்களை மீட்கும் முயற்சியில் தாய்லாந்து மீட்பு பணியினருடன் சீனா, மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர். சிறுவர்கள் பத்திரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, மருந்து முதலியவை வழங்கப்பட்டது. தண்ணீரை கடந்து அவர்களை மீட்கும் முயற்சியில் தன்னார்வமாக உதவி செய்து வந்த தாய்லாந்து முன்னாள் கடற்படை வீரர் சமன் குணான் ஆக்ஸிஜன் குறைவால் உயிரிழந்துள்ளார்.
சிறுவர்கள் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களை சிரமப்படுத்தி விட்டதற்காக தன்னை மன்னித்து விடும்படி கோரியும் அவர்கள் பயிற்சியாளர், சிறுவர்களின் பெற்றோருக்கு ஒரு கடிதத்தை மீட்பு படையினரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
உலகம் எங்குமுள்ள கால்பந்து வீரர்கள், இளம் கால்பந்தாட்ட வீரர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யாவில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பை போட்டிகளின் தலைவர் கியானி இன்ஃபென்டினோ, குகைக்குள் சிக்கியுள்ள வீரர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று தாம் நம்புவதாகவும், உடல்நிலை ஒத்துழைத்தால் மாஸ்கோவில் நடைபெற உள்ள கால்பந்து கோப்பைக்கான இறுதிப் போட்டியை காண அவர்கள் வரவேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார்.