இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

அமெரிக்கா கான்சாஸ் சிட்டியில் மிசௌரி பல்கலைக்கழகத்தின் (UMKC) பட்ட மேற்படிப்பு மாணவரான சரத் கோப்பு, வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.   தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த அவர், அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு செல்லும் முன்னர் ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் தான் அவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு படிப்பதற்காக சென்றுள்ளார்.   25 வயதான சரத் கோப்பு, பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டே உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமை இரவு, கான்சாஸ் நகரில் (Kansas City) அவர் பணியாற்றி வந்த ஜேஸ் மீன் மற்றும் கோழி அங்காடியில் (J's Fish and Chicken Market) நடந்த கொள்ளை முயற்சியின்போது அவர் சுடப்பட்டதாக தெரிகிறது. மற்றவர்கள் கீழே குனிந்து மறைந்து கொண்டனர். சரத், திரும்பி ஓடினார். அப்போது கொள்ளையர்கள் சுட்டதில் அவர் உடலின் முதுகு பக்கம் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததாக உணவகத்தின் உரிமையாளர் சாஹித் தெரிவித்துள்ளார்.   சனிக்கிழமை, இந்தக் கொலையில் சந்தேகத்திற்குரிய நபரின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கொலை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 10,000 டாலர் வெகுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தவர்கள் 816-234-5043 / 816-474-8477 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
More News >>