தொடரும் தாக்குதல்... கலக்கத்தில் காவல்துறை!
சென்னையில் இரு ஆயுதப்படை காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஞானசேகரன், பணியை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். தாம்பரம் ரயில்நிலையம் அருகே சிறுநீர் கழித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் காவலரின் செல்போனை கேட்டு மிரட்டியுள்ளார்.
செல்போன் தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த மர்ம நபர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர் கையை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், ஞானசேகரனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காவலரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், ஆயுதப்படை காவலர் முத்துகுமரன் சனிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் காவலரின் வாகனத்தில் மோதுவது போல் வரவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில், மாணவர் சரவணன் காவலரை தாக்கியுள்ளார். சம்பவம் தொடர்பாக சரவணனை நேற்று கைது செய்த போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர். சனிக்கிழமை நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ராஜவேலுவை தொடர்ந்து, கடந்த 5 தினங்களில் மேலும், இரு காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.