பசுமை வழிச்சாலை திட்டம் - முதலமைச்சர் குற்றச்சாட்டு
சென்னை- சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்தை சிலர் திட்டமிட்டு நிறுத்த முயற்சிப்பதாக பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என்பது நியாயமா என கேள்வி எழுப்பினார். மேலும், நிபுணர் குழு அமைத்து, ஆய்வு செய்து மாற்றுப்பாதையில் திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "பசுமை வழிச்சாலை திட்டம் சேலத்துக்கானது போல் சிலர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். நிலம் கையகப்படுத்த 90 விழுக்காட்டினர் சம்மதித்துள்ள நிலையில்,10 விழுக்காட்டினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்" என விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், "திமுக ஆட்சியிலும் நிலம் கையகப்படுத்தி, சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.
திமுக ஆட்சியில் கொடுத்ததை விட, அதிக இழப்பீடு தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். பசுமை வழிச்சாலை திட்டம் நிறைவேற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.