நீட்டுக்கு எதிராக சட்டப்போரை தொடங்க ராமதாஸ் வேண்டுகோள்
நீட் தேர்வை அடியோடு அகற்றுவதற்கான சட்டப்போரை தமிழக அரசு முழுவீச்சில் நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கு எந்த வகையிலும் தேவையில்லாத நீட் தேர்வை வலுக்கட்டாயமாக திணித்ததன் மூலம் மிகப்பெரிய சமூக அநீதியை மத்திய அரசு இழைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கணினி மூலம் நீட் தேர்வு, ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு ஆகிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது".
கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு எழுதிய அனுபவம் இல்லை என்பதால் கணினி மூலம் தேர்வு எழுதுவது அவர்களின் வாய்ப்புகளை பாதிக்கும்; ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்துவது தனிப்பயிற்சி நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சி என்பதுதான் தமிழகத்திலிருந்து எழுந்துள்ள குற்றச்சாட்டாகும்.
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், அந்தத் தேர்வால் இன்று வரை எந்த விதமான ஆக்கப்பூர்வ மாற்றங்களும் ஏற்படவில்லை. மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதும் தான் நீட் தேர்வின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், தகுதியையும், திறமையையும் ஒதுக்கி வைத்து விட்டு, பணம் இருந்தால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மிக எளிதாக மருத்துவப் படிப்பில் சேர்ந்து விடலாம் என்ற நிலைதான் இப்போதும் நீடிக்கிறது.
பணத்தை மட்டும் தகுதியாகக் கருதி மருத்துவப் படிப்பில் சேர்க்கப்படுபவர்களால் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. ஆக்கப்பூர்வமான எந்த பயனையும் அளிக்காமல், ஊரக, ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை மட்டும் ஒரு தேர்வு பறிக்கிறது என்றால், இந்தியாவில் உடனடியாக அழிக்க வேண்டியது அந்தத் தேர்வைத் தான்.
ஆகவே, நீட் தேர்வு உடனடியாக நீக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற ஆணைப்படிதான் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் கூட, ஒரு வகையில் இப்போது நடத்தப்படும் நீட் தேர்வு சட்ட விரோதமானது என்பது தான் உண்மையாகும். நீட் தேர்வு சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இப்போது வரை எந்தத் தீர்ப்பும் வழங்கவில்லை.
மாறாக நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், அனில்தவே ஆகியோர் அடங்கிய அமர்வு 18.07.2013 அன்று அளித்தத் தீர்ப்பில் நீட் தேர்வு செல்லாது என்று அறிவித்தது. நீதிபதி அனில் தவே மட்டும் இதற்கு எதிராக தீர்ப்பளித்திருந்தார்.
இதனால் 2013 முதல் 2015 வரை இந்தியாவில் எங்கும் நீட் தேர்வு நடத்தப்படவில்லை என்பதே உண்மை. பின்னாளில் அத்தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி அனில் தவே தான் 2013-ஆம் ஆண்டு தீர்ப்பு செல்லாது என தீர்ப்பளித்தார். ஆனால், நீட் தேர்வு தொடர்பான முதன்மை வழக்கு இன்னும் விசாரிக்கப்படாமல், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இரு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள அந்த வழக்கை விரைவாக நடத்தி, சாதகமான தீர்ப்பைப் பெறுவதன் மூலம் தான் ஊரக, ஏழை மாணவர்களுக்கான சமூகநீதியை பாதுகாக்க முடியும். எனவே, மத்திய அரசின் மாயவலையில் வீழ்ந்து விடாமல், நீட் தேர்வை அடியோடு அகற்றுவதற்கான சட்டப் போரை முழு வீச்சில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.