சர்கார் போஸ்டர்... விஜய்க்கு நோட்டீஸ்
சர்கார் பட போஸ்டர் விவகாரம் தொடர்பான வழக்கில், விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்பட நான்கு தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு புகையிலை பொருட்களுக்கு எதிரான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிரில் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தார்.
அதில், "சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் விளம்பரம் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராக சர்கார் போஸ்டர் இருக்கிறது.
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்த தடை விதித்து கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. புகைப்பிடிக்கும் காட்சியை சினிமா, டி.வி. சீரியல் உள்ளிட்டவைகளில் இடம் பெற கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் விளம்பர படத்தில் அவர் சிகரெட்டை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இது, சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் விளம்பரம் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிரானது" என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸிடம் இருந்து 10 கோடி இழப்பீடு பெற்று அந்த தொகையை ராயப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என வாதிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்பட 4 தரப்பினர் 2 வாரத்திற்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.