அமெரிக்காவை விட முன்னேறுவோம்!- ம.பி. முதல்வர் சிவராஜ்

மத்திய பிரதேசத்தில் இருக்கும் நகரங்களை அமெரிக்காவின் நகரங்களை விட சிறந்ததாக மாற்றிக் காண்பிப்பேன் என்று கூறியுள்ளார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.

இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், இன்று நகர்ப்புற வளர்ச்சிக்காக 14,000 கோடி ரூபாயில் திட்டங்கள் தொடங்கி வைத்தார் அம்மாநில முதவர் சௌகான்.

அவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர், ‘அமெரிக்காவில் இருக்கும் நகரங்களை விட மத்திய பிரதேசத்தில் உள்ள நகரங்களை என் தலைமையிலான அரசு சிறந்ததாக மாற்றும். நம் மாநில நகரங்களை மிகுந்த நவீனமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவரப்படுகின்றன.

இந்த வளர்ச்சி நடவடிக்கைகள் தொடரும். அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய பிரதேசத்தில் உள்ள நகரங்கள் தான் இந்திய அளவில் சுத்தமானதாக, அழகானதாக, வளரச்சி பெற்றதாக இருக்கும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இதைப் போன்ற கருத்துகளை அவர் முன்னர் ஒரு முறை சொல்லியுள்ளார்.

அமெரிக்காவுக்கு சில மாதங்கள் முன்னர் பயணம் செய்திருந்த போது, ‘வாஷிங்டனில் விமானநிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக பயணம் செய்த போது, மத்திய பிரதேசத்தில் இருக்கும் சாலைகள் இதைவிட சிறந்தவையாக இருக்கின்றன என்று நினைத்தேன். இதைச் சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, உண்மையில் எனக்கு அப்பட்டித்தான் படுகிறது’ என்று கூறியிருந்தார் சௌகான்.

More News >>