இது அனைவருக்குமான நீதி- நிர்பயா தாய் உருக்கம்
2012-ம் ஆண்டு டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் ஈர்ப்பு குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி. நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா ஆகியோர், தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற இன்று தீர்ப்பை வழங்கியது.
அதில், குற்றவாளிகள் பாலியல் பலாத்காரத்திலும், கொடுமைபடுத்தும் செயல்களிலும் ஈடுபட்டது உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட மரண தண்டனையில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை என்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து நிர்பயாவின் தாய் தேவி, ‘இது அனைவருக்கும் கிடைத்த நீதி. ஆனால், போராட்டம் இங்கு முடிவடையப் போவதில்லை. தொடர்ந்து நீதி தாமதமாகிக் கொண்டே போகிறது. இது சமூகத்தில் இருக்கும் மற்ற பெண்களை பாதிக்கிறது. நீதித் துறையிடம் அவர்களின் சட்டத்தை இன்னும் கடுமையானதாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க விரும்புகிறேன். சீக்கிரமே குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்’ என்றார்.