சாகச வீடியோவுக்காக உயிரைவிட்ட இளைஞர்கள்!

கடந்த 3 ஆம் தேதி கனடாவில் இருக்கும் ஷானன் நீர்வீழ்ச்சியில், ‘ஹை ஆன் லைஃப்’ என்ற தங்களது யூ-டியூப் சேனலுக்காக ஒரு ரிஸ்க் வீடியோவை எடுக்க முயன்ற 1 பெண் உட்பட 3 இளைஞர்கள் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

‘ஹை ஆன் லைஃப்’ என்ற யூ-டியூப் சேனலை சில இளைஞர்கள் சேர்ந்து நடத்தி வருகின்றனர். உலகின் மிக அழகான, அதே நேரத்தில் ஆபத்தான பகுதிகளுக்குச் சென்று சாகசங்கள் நிகழ்த்துவது இவர்களின் வழக்கம். அப்படி அவர்கள் நிகழ்த்தும் சாகசங்களை வீடியோ படம் பிடித்து, தங்களது யூ-டியூப் சேனலில் அப்லோட் செய்வதை முழு நேர வேலையாக வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மேகன் ஸ்க்ரேப்பர், ரைகர் கேம்பல், அலெக்ஸி லியாக் ஆகிய ‘ஹை ஆன் லைஃப்’ உறுப்பினர்கள், கனடாவில் இருக்கும் ஷானன் நீர்வீழ்ச்சியில் ஒரு அபாயகரமான டைவிங்கிற்குத் தயாராகி வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மேகன் நீர் வீழ்ச்சிக்குள் வழுக்கி விழுந்துள்ளார்.

அவரைக் காப்பாற்ற ரைகர் மற்றும் அலெக்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து நீர்வீழ்ச்சிக்குள் குதித்துள்ளனர். இதையடுத்து, மூன்று பேரும் நீர்வீழ்ச்சியின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பிய நிலையில், ஹை ஆன் லைஃப் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் குழு உறுப்பினர்கள், ‘இந்த உலகம் குறிப்பிடத்தக்க மூவரை இழந்துள்ளது. ஒவ்வொரு நாளையும் உயிரிழந்த எங்கள் சகாக்கள் மூவரும் முழு மனதோடு வாழ்ந்தனர். நேர்மறை சிந்தனைக்கும், தைரியத்துக்கும் பக்கமாக நின்று ஒரு மிகச் சிறந்த வாழ்க்கையை அவர்கள் நடத்தினர். அவர்களின் திறனைப் பற்றியும் பிடிப்புகள் பற்றியும் உலகம் முழுவதும் பல லட்சம் பேருக்கு எடுத்துக் கூறினர்’ என்று உருக்கமாக பேசினர்.

 

More News >>