தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்கள்- எட்டு பேர் மீட்பு
தாய்லாந்து சியாங்ராய் பகுதியில், தாம் லுவாங் குகை உள்ளது. இதனை 12 சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் என மொத்தம் 13 பேர் லுவாங் குகையை பார்வையிடச் சென்றனர்.
அப்போது, இவர்கள் 13 பேரும் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து நடத்திய தேடுதல் பணியின்போது, 9 நாட்களுக்கு பிறகும் அவர்கள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதன்பிறகு, தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களும் அனுப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அங்கு திடீரென பெய்த மழை காரணமாக குகைக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அவர்களை மீட்பது பெரும் சவாலாக இருந்தது. இதற்கிடையே, மீட்புப்பணியில் ஈடுபட்டு இருந்த மீட்புக் குழு வீரர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதனால், மேலும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் முதல்கட்டமாக 4 மாணவர்களை மீட்கப்பட்டு மீட்பு குழுவினர் நிவாரண முகாமிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து, மேலும் இரண்டு மாணவர்களை மீட்டனர். இவர்களை, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மேலும் இரண்டு பேர் என இதுவரையில் எட்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.