பல் இல்லாத அமைப்பு லோக் ஆயுக்தா - ஸ்டாலின்

தமிழக அரசு கொண்டுவந்துள்ள லோக் ஆயுக்தா பல் இல்லாத அமைப்பாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

15 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிறைவேற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தி, ஜூலை 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிமுகம் செய்தார். உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், ஏகமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

மசோதாவில் உள்ள சரத்துகள்:-

பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு

ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். நான்கில் 2 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

முதலமைச்சர்,சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வானவர்கள் ஆளுநரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.

முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொது ஊழியர்கள் விசாரணை வரம்புக்குள் அடங்குவார்கள்.

தவறான அற்பத்தனமான புகார்கள் கொடுப்பவர்களுக்கு அதிகபட்சம் 1 ஆண்டு சிறை மற்றும் 1 லட்சம் அபராதம் விதிக்கலாம்.

போலி புகார் அளித்தவர் பாதிக்கப்பட்ட பொது ஊழியருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்

இந்த சரத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக, தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “பல் இல்லாத அமைப்பு, லோக் ஆயுக்தா,எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பு” என விமர்சித்துள்ளார்.

More News >>