சாதி, வருமானச் சான்றிதழ்களை இனி மொபைல் ஆப்பில் விண்ணப்பிக்கலாம்
சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை இனி மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், சாதி, வருமானம், இருப்பிடும், முதல் பட்டதாரி, கணவனால் கைவிடப்பட்ட பெண் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ சேவை மையங்களில் பொது மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இ சேவை மையங்களில் அடிக்கடி சர்வர் பிரச்னைகள் வருவதால், பொது மக்கள் சான்றிதழ்களுக்காக விண்ணப்பிக்க நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டி உள்ளது. அதனால், பொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் "UMANG" என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் சாதி, இருப்பிட, வருமான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “UMANG ஆப்பில் ஆதார் அடிப்படை மட்டும் விண்ணப்பிக்க முடியும். முதலில், விண்ணப்பத்தாரர் தங்களது முழு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர், சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்க வேண்டும். அதில், விண்ணப்பத்தாரரின் ஆவணங்கள், புகைப்படங்கள் அல்லது பிடிஎப் பைலாக பதிவேற்றம் செய்யலாம்.ஆதார் எண்ணை இணைத்து அதன்பிறகு சான்றிதழ் விண்ணப்பிக்கலாம், இதேபோல், ஆதார் எண் அடிப்படையில் சான்றிதழ் எளிமையாக பெறலாம்” என்றனர்.