ஒரு நீண்ட ரயில் பயணம்
ஒரு நீண்ட ரயில் பயணம்....
<img class="alignleft size-medium wp-image-5638" title="Chennai Central Train Station, Chennai. Tamil Nadu, India (2004)" src="http://www.giriblog.com/wp-content/uploads/2012/06/Chennai-Central-300x199.jpg" alt="" width="300" height="199" srcset="http://www.giriblog.com/wp-content/uploads/2012/06/Chennai-Central-300x199.jpg 300w, http://www.giriblog.com/wp-content/uploads/2012/06/Chennai-Central.jpg 350w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />ரயில் பயணம் செல்லாத நபர்கள் நம்மில் இருப்பது வெகு குறைவாகவே இருக்கும்.
கிராமத்தில் உள்ளவர்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் சென்று இருக்காமல் வாய்ப்புள்ளது.
மற்றபடி ரயில் போக்குவரத்து ஒரு தவிர்க்க முடியாத ஒரு போக்குவரத்து ஆகும், இதற்கு முக்கியக்காரணம் பயணச்சீட்டின் விலை, பாதுகாப்பான பயணம், சரியான நேரத்திற்கு சென்று விடலாம் என்பதாகும்.
எனக்கும் ரயிலுக்கும் ரொம்ப நெருங்கிய நட்புண்டு. எத்தனை முறை திட்டினாலும் திரும்ப அதில் செல்லவே மனம் விரும்பும். ரயில் பயணங்களுக்கு (அதிக கூட்டமில்லாத பயணம், நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்) நான் ஒரு அடிமை மாதிரி தான்.
ரயிலின் தடக் தடக் சத்தமும், அலறல் ஹாரன் சத்தமும், ரயில் நிலையங்களுக்கே உள்ள மீன் வாடையும், ரயிலில் உள்ள இரும்பு வாடையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். உண்மையில் எனக்கு மீன் வாசம் பிடிக்காது இதை ரசிப்பது ரயில்நிலையங்களில் மட்டுமே.
என்னுடைய சிறிய வயதில் இருந்தே, ரயில் என்றால் எனக்கு ரொம்பப் பிடித்தமானது. என்னுடைய அப்பா ஏதாவது வேலை விசயமாக அடிக்கடி சென்னை செல்வார்கள், அப்போதெல்லாம் நான் அடம் பிடித்து நானும் வருகிறேன் என்று கூறி அவருடன் செல்வேன்.
அதற்குக் காரணம் ரயிலில் செல்லலாம் என்ற எண்ணம் தான். என்னுடைய அப்பா, “டேய்! அங்கே வந்தா என்கூட நடந்து தான் வரணும்.. ஆட்டோ வேண்டும் என்று கேட்கக்கூடாது” என்று நிபந்தனையுடன் கூட்டிச் செல்வார்.
அங்கே போன பின், அப்பாவின் நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஆட்டோ கேட்டு திட்டு வாங்குவது தனிக்கதை. இப்ப ஆட்டோ என்றால் நான் தலைதெறிக்க ஓடுவது அதைவிட ஒரு பெரிய கதை.
காலங்கள் சென்றாலும் என்னுடைய ரயில் பயண ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. ஒவ்வொருமுறை செல்லும் போதும், எனக்கு முதல் முறை செல்வது போலவே ஆர்வமாக இருக்கும். இன்று வரை எனக்கு காரணம் புரியவில்லை.
திரைப்படங்களில் வரும் ரயில் காட்சிகளைக் கூட ஆர்வமாகப் பார்ப்பேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .