வேண்டுமென்றே எதிர்க்கின்றனர்!- எடப்பாடி பழனிசாமி விளக்கம்
'சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இதைப் பலர் எதிர்க்கின்றனர்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘இந்தத் திட்டம் என்னவோ சேலத்துக்கு மட்டுமே பயன் தரப் போவதாக சிலர் பரப்பரை செய்து வருகின்றனர். ஆனால், தமிழக மேற்கு மாவட்டங்கள் பல இதனால் பயனடையப் போகின்றன. குறிப்பாக நாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களும் கேரளாவின் பல மாவட்டங்களும் இந்தத் திட்டம் அமல்படுத்துவதால் பயனடையும்.
8 வழிச் சாலையின் மூலம், சென்னைக்கு வரும் தூரம் 60 கிலோ மீட்டர் வரை குறைக்கப்படுகிறது. இதனால், லாரி உரிமையாளர்களுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும். மேலும், காற்று மாசுவும் குறைக்கப்படும். வரும் ஆண்டுகளில் தமிழக அளவில் வாகனங்கள் அதிகமாக பயன்படுத்தப்படும். அதை மனதில் வைத்தே இந்தத் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம்.
இதைப் போன்ற திட்டங்களுக்கு திமுக ஆட்சியிலும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், சிலர் இந்தத் திட்டத்தை வேண்டுமென்றே முழு மூச்சுடன் எதிர்த்து வருகின்றனர். தமிழகத்துக்கு 8 வழிச் சாலைத் திட்டம் வந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர்’ என்று கூறினார்.
திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘8 வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக பேசுபவர்களை இந்த அரசு போலீஸ் துணையுடன் ஒடுக்கு வருகிறது. இது சுதந்திரமாக கருத்து கூறுவதற்கு பேரபத்தாக உள்ளது’ என்று குற்றம் சாட்டினார்.