நீட் தேர்வு... உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த மே மாதம் 6-ஆம் தேதி நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில், தமிழகத்தில் இருந்து 1,14,602 பேர் தேர்வு எழுதினர். இதில், தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதியவர்கள் 24,720 பேர்.

இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழியாக்கம் செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் சிபிஎஸ்இ-யை கண்டித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பெரும்பான்மை அடிப்படையில் விடைகளைத் தீர்மானிப்பதாகவும், சர்வாதிகார முறையில் சிபிஎஸ்இ செயல்படுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் 2 வாரத்திற்குள் புதிய பட்டியலை வெளியிடவும் சிபிஎஸ்இக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை எதிர்த்து, நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More News >>