இன்னும் தொடங்கவே இல்லை, அதற்குள் அந்தஸ்தா?- சர்ச்சையில் ஜியோ பல்கலை
மத்திய அரசு, ‘சர்வதேச அளவில் இந்தியாவில் இருக்கும் பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்தும் நோக்கில் பொதுத் துறை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் சிலவற்றை தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு பெரும் நிதி கொடுக்கப்படும். இதனால், அவைகள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்’ என்று தெரிவித்தது.
இதையடுத்து, தற்போது 3 கல்வி நிறுவனங்களை முதற்கட்டமாக தேர்வு செய்துளது மத்திய அரசு. அதன்படி இரண்டு ஐஐடி-க்களும், ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பல்கலைக்கழகமும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஜியோ பல்கலைக்கழகம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த முடிவு தற்போது பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘இன்று சிறப்பு அந்தஸ்து பெறப் போகும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளோம். இது இந்திய கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்த முக்கிய புள்ளியாக இருக்கும். நம் நாட்டில் 800 பல்கலைக்கழங்கள் இருக்கின்றன. ஆனால், ஒன்று கூட முதல் 200 பட்டியலில் இடம் பெறுவதில்லை. அந்த நிலை இந்த நடவடிக்கை மூலம் மாறும்’ என்று ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.
இந்த விஷயம் தொடர்பாக காங்கிரஸ், ‘பாஜக தலைமையிலான மத்திய அரசு, மீண்டும் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோருக்குச் சாதகமாக ஒரு முடிவை எடுத்துள்ளது. இன்னும் தொடங்கவேப்படாத ‘ஜியோ பல்கலைக்கழகத்துக்கு’ எப்படி அரசு சிறப்பு அந்தஸ்து கொடுத்தது. இது குறித்து விளக்கம் வேண்டும்’ என்று கூறியுள்ளது.