ஹாசினி கொலை வழக்கு: தஸ்வந்த்துக்கு தூக்கு தண்டனை உறுதி
சென்னை போரூரை அடுத்த குன்றத்தூர் மாதானந்தபுரத்தை சேர்ந்த பாபுவின் 6வயது மகள் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான் கொலையாளி தஸ்வந்த். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இச்சம்பவத்தில் கைதான தஸ்வந்த் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்து தனது தாயை கொலைசெய்து விட்டு மும்பைக்கு தப்பினான்.
கொலையாளி தஸ்வந்த்தை தேடி மும்பை விரைந்த தமிழக போலீசார் அவனை கையும் களவுமாக கைது செய்து சென்னை அழைத்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தஸ்வந்துக்கு தூக்கு தண்டனையும், 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.
தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து தஸ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தான். அதில் இந்த வழக்கில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. ஆதலால் தன்னுடைய தூக்குத்தண்டனையை குறைக்குமாறு மேல்முறையீடு செய்தான்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ராமதிலகம் மற்றும் விமலா ஆகியோர் முன்பு இன்று வந்தது. விசாரணை முடிந்ததும் தஸ்வந்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.