அடித்தது யோகம்! - கிரிக்கெட் வீரர்களுக்கு இரு மடங்கு ஊதியம்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரு மடங்காக ஊதியம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் திகழ்கிறது. ஆனால், வீரர்களுக்கு வழங்கும் சம்பள விகிதத்தில் பல பிரச்சனைகள் அடிக்கடி உருவாகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் அளிக்கும் சம்பளத்திற்கு இணையாக இந்திய வீரர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த காலத்தில் வீரர்களுக்குரிய சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.சம்பளம் பிரிக்கப்படும் வீதம் - இந்திய அணியில் விளையாடும் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

ஏ- பிரிவு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடியும், பி- பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடியும், சி- பிரிவினருக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஊதிய ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் கேப்டன் கோலி, தோனி, ரவி சாஸ்திரி ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியநிர்வாகக் குழு தலைவர் வினோத் ராயை சந்தித்து சம்பளம் விவகாரம் குறித்து பேச்சு நடத்தினர்.

வீரர்களின் கோரிக்கையை ஏற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், உச்சநீதிமன்றம் நியமனம் செய்த நிர்வாகிகள் குழுவும் ஊதிய உயர்வு குறித்து ஆலோசனை நடத்தியது. முடிவில் ஊதியத்தை 100 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.180 கோடி நிதி என்ற அலவில் இருந்து வந்தது. இதனுடன் மேலும் ரூ.200 கோடி சேர்த்து வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வு திட்டம் சர்வதேச வீரர்கள், ரஞ்சி போட்டிகளில் விளையாடும் வீரர்கள் என அனைத்து பிரிவினருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இறுதி அறிக்கை தயார் செய்த பின் 2018-ல் நடக்கும் தென்னாப்பிரிக்க தொடரில் சம்பள உயர்வு நடை முறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இந்த ஆண்டில் கோலி, பிசிசிஐ-யிடம் வருமானமாக ரூ.5.5 கோடியை பெற்றுள்ளார். இனிமேல் இது ரூ.10 கோடியாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>