லதா ரஜினிகாந்த் மீதான எஃப்ஐஆர் ரத்து இல்லை- உச்ச நீதிமன்றம்
லதா ரஜினிகாந்த் மீதான எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ‘ஆட் பீரோ விளம்பர நிறுவனத்திடமிருந்து ‘கோச்சடையான்’ படப்படிப்பின் போது பெற்ற கடனான 6.2 கோடி ரூபாயை திரும்ப கொடுக்கச் சொன்ன பிறகும் ஏன் இன்னும் லதா ரஜினிகாந்த் பணத்தைக் கொடுக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.
கோச்சடையான் படப்பிடிப்பின் போதே ஆட் பீரோ நிறுவனம், மீடியோ ஒன் நிறுவனம் ஆகியவற்றுடன் லதா ரஜினிகாந்துக்கு பண விவகாரம் தொடர்பாக பிரச்னை வந்துள்ளது. இதையடுத்து, ஆட் பீரோ நீதிமன்றத்துக்குச் சென்றது. நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. அப்போது, ‘கடனை இன்னும் 12 வாரங்களில் கொடுக்க வேண்டும்’ என்று கூறியது.
ஆனால், பணம் இன்னும் கொடுக்கப்படவில்லை. இது ஒரு புறமிருக்க, கோச்சடையான் படப்பிடிப்பின் போது ஆட் பீரோ, லதா ரஜினிகாந்துக்கு 10 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றம் சாட்டியது. இது தொடர்பாகவும் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்தது ஆட் பீரோ.
ஆனால், ஆட் பீரோவுடன் எந்த வித தகவலும் சொல்லப்படாமல் மீடியா ஒன், கோச்சடையான் உரிமங்களை எரோஸ் நிறுவனத்துக்கு விற்றது. இந்நிலையில், இன்றைய வழக்கு விசாரணையில் கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது என்றும் பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை லதா ரஜினிகாந்த் எதிர்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.