அமித்ஷாவின் கருத்தை மாற்றிய ஹெச்-ராஜா...அமைச்சர் விமர்சனம்
தமிழகம் குறித்த அமித்ஷாவின் கருத்தை ஹெச்.ராஜா மாற்றி மொழிபெயர்த்திருப்பார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வந்தார். இதனையடுத்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அமித்ஷா, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடந்த பாஜக உயர்மட்டக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
"ஊழல் இல்லாத கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். நாட்டிலேயே தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மற்ற கட்சிகளை விட பாஜக நிறைய செய்துள்ளது. தமிழகத்தில் பாஜக பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றார்.
"தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஊழலை ஒழிக்க வேண்டும். ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையை மாற்ற வேண்டும்." என்று அமித்ஷா பேசியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "தமிழக அரசை பற்றி அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார். மொழி பெயர்த்த ஹெச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார். ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் கட்சிகள் திமுக, தினகரன் கட்சி தான்" எனக் கூறினார்.