லாராவின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
நான்கு ஆண்டுகள் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்கள் குவித்ததன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் லாராவின் சாதனையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றிருந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 403 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடி வரும் ஆஸ்திரேலியா அணி தற்போது வரை நான்கு விக்கெட் இழப்பிறகு 470 ரன்கள் குவித்துள்ளது. இதில் ஸ்டீவ் ஸ்மித் இரட்டைச் சதம் விளாசினார்.
இந்நிலையில் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார். அவர் தொடர்ச்சியாக 2014, 15, 16, 17 ஆகிய நான்கு ஆண்டுகளும் ஆயிரம் ரன்களுக்கு மேலாக குவித்துள்ளார். முன்னதாக லாரா தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் [2003, 04, 05] ஆயிரம் ரன்களுக்கு மேலாக குவித்திருந்தார்.
இந்த சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். அதிகப்பட்சமாக ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹைடன் ஐந்து ஆண்டுகள் [2001, 02, 03, 04, 05] ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். மேலும், இந்த நான்கு ஆண்டுகளிலும் அவரது சராசரி 60க்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.