ஆபத்தான நிலையில் ஜெயலலிதா அட்மிட் ஆனார் - உண்மையை திறந்த அப்பல்லோ தலைவர்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு 22ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அப்போது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் 75 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாசரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிட தமிழக அரசு சார்பில் மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜன், கலா, முத்துசெல்வன், டிட்டோ ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களுக்கு ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மருத்துவர் பாலாஜி மட்டும், ஜெயலலிதாவை சிகிச்சையின் போது நேரில் பார்த்ததாக ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் அவர், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சுயநினைவு இல்லை என்றும் ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது. அதன்படி மருத்துவ அறிக்கையை தமிழக அரசு, விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையிலும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதாவுக்கு சுயநினைவு இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் என்று செய்தி அறிக்கை வெளியிடப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாது என்பதால் உண்மை நிலையை அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையத்திலிருந்து இதுவரை எந்த சம்மனும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.