அமெரிக்காவில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை!

அமெரிக்காவின் மோண்டானா மலைப்பகுதியில் உயிருடன் அரைகுறையாக புதைக்கப்பட்டிருந்த ஐந்து மாத ஆண்குழந்தையை போலீசார் மீட்டனர். ஏறக்குறைய ஒன்பது மணி நேரம் குழந்தை கவனிப்பாரற்ற நிலையில் கிடந்திருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

லேலோ ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் ஒரு நபர் வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், சுற்றியிருப்பவர்களை சுட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் காவல்துறையினருக்குத் தகவல் வந்தது.

ஆனால், காவல்துறையினர் அந்தப் பகுதிக்குச் சென்றபோது, அந்த நபர் அங்கு இல்லை. காவல்துறையினர், அந்த நபருடன் இருந்த குழந்தையையும் சில மணி நேரமாக காணவில்லை என்று தெரிந்து கொண்டனர்.

சிறிது நேரம் கழித்து, அந்தப் பகுதிக்கு திரும்பியவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பெயர் பிரான்சிஸ் கார்ல்டன் கிரௌலி என்பதும் வயது 32 என்ற விவரமும் தெரிய வந்தது. முன்னுக்குப் பின் முரணாக பேசிய அந்த நபர் போதையில் இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

குழந்தையை குறித்து விசாரித்தபோது, அது மோண்டானா மலைப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று பிரான்சிஸ் கூறியதாக தெரிகிறது. காவல்துறையினர் இரவு முதல் மலைப்பகுதியில் தேடி வந்தனர். அதிகாலை குழந்தையின் மெல்லிய அழுகுரல் கேட்டு, அந்த இடத்திற்குச் சென்று குழந்தையை உயிருடன் மீட்டனர்.

குழந்தை தலைகுப்புற போடப்பட்டு, அரைகுறையாக கட்டைகள் மற்றும் குப்பைகளை கொண்டு புதைக்கப்பட்டிருந்தது. உடலில் சில கீறல்கள் தவிர, குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை மோண்டானா குழந்தை மற்றும் குடும்ப சேவை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரான்சிஸ் கார்ல்டன் கிரௌலி பல்வேறு வழக்குகள் காரணமாக ஏற்கனவே சிறை சென்று வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

More News >>