உலகின் வளர்ந்த பொருளாதாரம்- இந்தியாவுக்கு ஆறாம் இடம்

உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முன்னேறி ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், சென்ற ஆண்டு முடிவில் இந்திய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.597 டிரில்லியன் டாலராக இருந்துள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸ் நாட்டு பொருளாதாரம் 2.582 டிரில்லியன் டாலராக இருந்தது. இதன்படி, உலக அளவில் தற்போது இந்தியா 6 வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.

அந்த இடத்திலிருந்த பிரான்ஸ் தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. வழக்கம் போல முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் நீடித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்தப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து ஏறு முகத்தில் செல்ல நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆருடம் கூறப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு, மத்திய அரசால் அமல் செய்யப்பட்ட உயர் ரக பணமதிப்பு நீக்க நடவடிக்கை, மற்றும் சென்ற ஆண்டு மத்தியில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி முறை ஆகியன இந்திய பொருளாதாரத்தில் எதிர்மறைத் தாக்கங்களை செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் மீண்டதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

More News >>