சத்துணவு முட்டை... 7 நிறுவனங்களின் மனுக்கள் நிராகரிப்பு
சத்துணவு முட்டை விநியோகம் செய்ய ஒப்பந்தம் கோரி விண்ணப்பித்த 7 நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் அலுவலகத்தில், சத்துணவு முட்டை விநியோகத்திற்கான ஒப்பந்த பணிகள் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த டெண்டரில் இந்த ஆண்டு 6 நிறுவனங்கள் பங்கேற்றன. வரி ஏய்ப்பு புகாருக்கு உள்ளான கிறிஸ்டி நிறுவனம் சார்பாக அதன் கிளை நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன.
மனுக்களை பரிசீலனை செய்த அதிகாரிகள், ஒப்பந்தம் வழங்குவது குறித்து, சுமார் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். இறுதியாக, ஒப்பந்தப்புள்ளி கோரும் 7 நிறுவனங்களின் மனுக்களை அதிகாரிகள் நிராகரித்தனர்.
அனுபவ சான்று, ஜி.எஸ்.டி. கணக்கு போன்றவை முறையாக இல்லை என ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முட்டை விநியோகத்திற்காக புதியதாக ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ள கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கக் கூடாது என மாற்று நிறுவனங்களும் சட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த ஒப்பந்தத்தை பெறும் நிறுவனம், ஒரு ஆண்டு முழுவதும் 450 கோடி ரூபாய்க்கு முட்டை விநியோகம் செய்யும் உரிமையை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.