யானைகள் வழித்தடம்... 400 விடுதிகளை அகற்ற உத்தரவு!
யானை வழித்தடங்களில் உள்ள சுமார் 400 விடுதிகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் கட்டுமானப் பணிக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளால் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருவதாகவும், இதனை தடுக்க அரசுக்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகூர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் சுமார் 400 விடுதிகள் கட்டப்பட்டு இருப்பதாக, மனுதாரர்கள் அறிக்கையாக தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மலைப்பகுதிகளில் புதிய கட்டுமானங்களை அனுமதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டனர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் ஆணையிட்டனர்.