தாய்லாந்து குகை சம்பவம்: 400 கோடி செலவில் படமாகிறது
தாய்லாந்தின் பிரபலமான மலைக்குகைக்கு பயணம் மேற்கொண்ட 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் கடந்த 23ம் தேதி ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி கொண்டனர். 9 நாட்கள் கழித்தே அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவந்தது.
தாய்லாந்து கடற்படையினர் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பயனாக 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 17நாட்கள் போராட்டம், பல்வேறு நாடுகளின் உதவி, மிகவும் சவாலான இப்பணிகளை பார்த்த தாய்லாந்து கடற்படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த இச்சம்பவத்தை அமெரிக்காவின் பியூர் பிளிக்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் செயல் அதிகாரி மிச்செல் ஸ்காட் மீட்பு பணிகள் நடந்த போது தான் பார்த்த அந்த மெய் சிலிர்க்கும் காட்சிகளை பிரமாண்டமாக எடுக்க உள்ளதாக கூறினார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில். "உலக அளவில் பெரிய வீர தீர செயலாக இந்த மீட்பு சம்பவம் பார்க்கப்படுகிறது. நேரில் பார்த்து நான் மெய் சிலிர்த்து போனேன். உலக வரலாற்றில் இது ஒரு சாதனை மைல்கல். எனவே நான் பார்த்த காட்சிகளை கொண்டு பிரமாண்ட படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.