டிரம்ப் வருகைக்கு லண்டனின் எதிர்ப்பு... பலூன் பறக்கவிடும் போராட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் பிரிட்டனுக்கு வருகை தந்துள்ளனர்.
வியாழன் மற்றும் வெள்ளி இருநாட்களும் அவர்கள் பிரிட்டனில் இருப்பார்கள். டொனால்டு டிரம்ப், பதவியிலிருக்கும்போது பிரிட்டனுக்கு வரும் 12ஆவது அமெரிக்க அதிபர் ஆவார். பிரிட்டனில் அவர் மகாராணியாரையும், பிரதமர் தெரசா மேயையும் சந்திக்க இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற பிறகு முதன்முறையாக டிரம்ப், பிரிட்டனுக்கு வருகை தந்துள்ளார் டிரம்ப். இவர் வருகைக்கு அநேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு அனுமதி கோரியுள்ளனர். பிளெய்ன்ஹெய்ம் மாளிகை, மத்திய லண்டன், செக்கர்ஸ், அயிர்ஷைர், எடின்பர்க் போன்ற பல இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
டிரம்ப்பை குழந்தை போன்று வடிவமைத்துள்ள 20 அடி (6 மீட்டர்) உயரமான ராட்சத பலூனை (Trump baby blimp) லண்டன் நகரில் மத்திய பகுதியான வெஸ்ட்மினிஸ்டரில் பறக்க விட அதன் மேயர் சாதிக் கான் அனுமதி அளித்துள்ளார்.
டிரம்ப், லண்டனில் இருக்கும் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை இது பறக்கவிடப்பட இருக்கிறது.