கந்துவட்டி அன்புச்செழியன் எங்கே? - மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றம்
25 நாட்களாக ஆகியும் அன்புச்செழியன் எங்கே இருக்கிறார் என்று கண்டிபிடிக்க முடியாததால், அன்புச்செழியன் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
நடிகரும் இயக்குனருமான சசிகுமாரின் உறவினரும், அவரது நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளருமான அசோக்குமார் நவம்பர் 21ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நடிகர் சசிக்குமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. குடும்பத்துடன் அன்புச்செழியன் தலைமறைவாகி உள்ளதால், தனிப்படை காவல் துறையினர், அவரது சொந்த ஊரான மதுரை மற்றும் தேனி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் தேடினர். ஆனாலும், அவர் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்புச்செழியன் தாக்கல் செய்திருந்த மனுவில், சினிமா துறையில் 30 வருடங்களாக நற்பெயருடன் இருக்கும் தான், வட்டிக்கு வட்டி வசூலிப்பதில்லை என்றும், அசோக்குமார் மரணத்துக்கு தான் காரணமில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், 'தாரை தப்பட்டை' படத்துக்காக வாங்கிய கடனை அடைப்பதிலிருந்து தப்பிப்பதற்காகவே இந்த குற்றச்சாட்டை சசிகுமார் தன் மீது சுமத்தியுள்ளதாகவும், அசோக்குமாரின் தற்கொலை கடிதம் இயற்கையானதாக தெரியவில்லை என்றும், சினிமாத்தனமாக இருப்பதாகவும் அன்புச்செழியன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தால் முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகும் நிலை இருந்தது. இந்நிலையில் அன்புச்செழியன் முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார். இதனிடையே அன்புச்செழியன் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் போலீஸார் அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டுதல் தவிர கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர். ஆனாலும் கடந்த 25 நாட்களாக அன்புச்செழியன் தலைமறைவாகவே உள்ளனர்.
இதையடுத்து வளசரவாக்கம் போலீஸாரிடமிருந்து அன்புச்செழியன் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.