கமல் அமாவாசையில் கொடியேற்றியது ஏன்?- தமிழிசை கேள்வி
'தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் கமல்ஹாசன் அமாவாசை தினத்தில் கட்சி துவங்கி, கொடியேற்றம் செய்து ஏன் வேஷம் போட வேண்டும்' என தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. நேற்று தலைமையகத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தத் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் மூத்த நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேசுகையில், "தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் கமல்ஹாசன் அமாவாசை தினத்தில் கட்சி துவங்கி, கொடியேற்றம் செய்து ஏன் வேஷம் போட வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழக அரசியலில் பாஜக-வின் நிலை குறித்துப் பேசுகையில், "வாக்குச்சாவடிக்கு ஒரு பாஜக பிரதிநிதி என்ற நோக்கி தமிழகத்தில் தேர்தலை சந்திக்கத் தயாராக உள்ளோம். தமிழகத்தில் எதிர்வரும் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் முடிவு செய்யப்படும். பாஜக யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை, கூட்டணிக்கு வரமாட்டோம் என சொல்வது வேடிக்கையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.