உலக சாம்பியன்ஷிப் தடகளம்- தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் ஹிமா!

உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஹிமா தாஸ்.

ஃபின்லாந்து, டாம்பேர் நகரில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹிமா தாஸ் தங்கம் வென்றுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ் ஒரு விவசாயியின் மகள் ஆவார்.

18 வயதான ஹிமா தாஸ் பங்குபெற்ற முதல் சர்வதேச தடகளப் போட்டியிலியே தங்கம் வென்று தன் சிறு வயதுக் கனவை நிறைவேற்றி, இதுவரையில் சர்வதேச தடகளத்தில் ஒரு தங்கம் கூட வாங்காத இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்து பெருமைப் படுத்தியுள்ளார்.

51.46 விநாடிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தை வென்று இதுவரையில் எந்தவொரு இந்தியரும் படைக்காத புதிய சாதனையை ஹிமா தாஸ் படைத்துள்ளார். இவருக்கு நாட்டின் முக்கியத் தலைவர்கள் வாழ்த்துச் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.

இதுவரையில் தடகள ஜாம்பவான்களாக அறியப்படும் மில்கா சிங், பி.டி.உஷா ஆகியோர் கூட ஆசியப் போட்டிகளில் தான் தங்கம் வென்றுள்ளனர். சர்வதேச போட்டிகளில் பெற்றதில்லை. இந்த இரு ஜாம்பவான்களும் ஒலிம்பிக் தடகளத்திலும் நான்காம் இடமே பெற்றிருந்தனர்.

ஆனால், அத்தனை பேரது சாதனையையும் முறியடித்து தங்கம் கைப்பற்றி புதிய சாம்பியனாக உருவெடுத்துள்ளார் ஹிமா தாஸ்.

More News >>