ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற அப்போலோவில் விசாரணை- நீதிபதி ஆறுமுகசாமி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வந்த அப்போலோ மருத்துவமனையில் நேரடி விசாரணை நடைபெறும் என நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அறிவித்துள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானர். ஆனால், ஜெயலலிதா அதற்கு முன்னதாக சுமார் இரண்டரை மாதங்கள் சென்னையில் கிரீன் வேஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா சசிகலா குடும்பத்தாரை விட வேறு யாரையும் நேரடியாகச் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மக்கள், ஊடகம் என யாரையும் சந்திக்கவில்லை. இதையடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பல தரப்புகளிலிருந்தும் வழக்குகள் நீதிமன்றங்களில் வந்து குவிந்தன.
இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வகையில், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அப்போலோ மருத்துவமனையில் வரும் 29 ஆம் தேதி நேரில் சென்று விசாரணை செய்ய உள்ளது. வருகிற 29 ஆம் தேதி மாலை 7 மணி 45 நிமிடங்கள் ஆய்வு நடத்தப்படும் என்றும் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற அறை, சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்தும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.