நிர்மலாதேவி வழக்கு... முதல் குற்றப் பத்திரிகை தாக்கல்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்டோர் மீது, விருதுநகர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், சிபிசிஐடி போலீசார் ஜூலை 16 ஆம் தேதிக்குள் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் உத்தரவிட்டது. ஆறு மாதத்திற்குள் வழக்கினை விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல், 1160 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி முன்னிலையில், சீலிடப்பட்ட கவரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1160 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப்பத்திரிகையில் வழக்கின் தன்மை குறித்து முழுமையான விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை என்றும், சென்னையில் நிர்மலா தேவிக்கு நடத்தப்பட்ட குரல் மாதிரி சோதனையின் முடிவுகள் வந்த பிறகு கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>