குழந்தைக் கடத்துபவர் என சந்தேகம்- அப்பாவிப் பெண் மீது தாக்குதல்

வடஇந்தியர்கள் பலர் குழந்தைக் கடத்தலில் ஈடுபடுவதாகக் கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் போலியான செய்திகளால், மதுரையில் ஒரு அப்பாவிப் பெண் தேவையில்லாமல் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.

மேலூரில் இருக்கும் பதினெட்டான்குடி என்ற ஊரில் இரண்டு வட இந்தியப் பெண்கள் கையில் பிஸ்கட் பாக்கெட்டுடன் சுற்றித் திரிந்துள்ளனர். சமீப காலமாக குழந்தை கடத்துபவர்கள் தமிழகத்தில் அதிகமாக உலவி வருகின்றனர் என்று தகவலால், இரண்டு பெண்கள் மீதும் சந்தேகப்பட்டுள்ளனர் உள்ளூர் மக்கள். கையில் பிஸ்கட் பாக்கெட் வைத்திருந்ததால், இந்த சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் ஒரு பெண்ணைப் பிடித்து உள்ளூர் மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அவரை கட்டி வைத்துள்ளனர். இது குறித்து போலீஸுக்குத் தகவல் சென்றுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், பெண்ணை ஊர் மக்களிடமிருந்து மீட்டு மேலூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.

தாக்கப்பட்டவருடன் இருந்த இன்னொரு வட இந்தியப் பெண், தப்பித்துவிட்டார். அவரைத் தேடும் பணியை போலீஸ் முடுக்கிவிட்டுள்ளது. பலமான காயம் ஏற்பட்டுள்ளதால், இதுவரை தாக்குதலுக்கு உள்ளான பெண்ணிடமிருந்து எந்த வித தகவலும் வாங்கப்படவில்லை என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

More News >>