கன்னியாகுமரிக்கு வரும் 19ம் தேதி பிரதமர் மோடி வருகை
கன்னியாகுமரி: ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை வரும் 19ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரபிக்கடலில் உருவான ஒக்கி புயலால், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம், கேரளாவில் உள்ள கடலோர மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தது. அன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலரை இதுவரை கரை திரும்பவில்லை. அதனால், மீனவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படை ஈடுபட்டுள்ளன. மீனவர்கள் பலர் இன்னும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் பார்வையிட வந்த வண்ணம் உள்ளனர். தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வரிசையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி, கேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் 19ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.