தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்... சிபிஐ கண்டனம்
ஆந்திரா கடற்பகுதியில் நாகை மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 19 பேரை, அம்மாநில மீனவர்கள் படகுடன் சிறைபிடித்து சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் 10 நாகை மீனவர்களை நடுக்கடலில் ஆந்திரா மீனவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பலத்த வெட்டுகாயம் அடைந்த அக்கரைப்பேட்டை மீனவர்கள் காத்தலிங்கம், இடும்பன், ஜெகதீஸ் ஆகியோர் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், படுகாயமடைந்த நாகை மீனவர்களுக்கு தமிழக அரசு தீவிர சிகிச்சை அளித்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் மீட்டெடுக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.