ஆதார் பணிகள்... தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திற்கு விருது
ஆதார் பதிவு மற்றும் திருத்த மையங்களை விரைவாக தொடங்கிய வட்டம் என்ற பிரிவில், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “அஞ்சல் துறை ஆதார் சேவைகளை மேம்படுத்தும் வசதிக்காக இந்திய தனித்தன்மை அடையாள ஆணையம் உடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. தமிழ்நாடு வட்டத்தில் சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 03.07.2017 அன்று ஆதார் விவரங்கள் திருத்தும் சேவை முதல் முறையாக தொடங்கியது.
ஆதார் பெறுவதற்கான சேவை 23.11.2017 அன்று தொடங்கியது. 2018 மார்ச் வரை 70 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் பதிவு அல்லது ஆதார் விவரங்கள் திருத்த சேவை கிடைக்கிறது.
2018 மார்ச் மாத வாக்கில் தமிழ்நாடு வட்டத்தில் உள்ள ஒரு போஸ்ட் மாஸ்டர், ஒரு எழுத்தர் பணிபுரியும் அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் அஞ்சல் அலுவலகங்களுக்கு ஆதார்சேர்ப்பதற்கான கருவித்தொகுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த வசதி கூடுதலாக 1365மையங்களுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது.
2018 ஏப்ரல் முதல் 2018 ஜூன் வரை 1365 அஞ்சல் அலுவலகங்கள் ஆதார்பெறுவதற்கு மற்றும் விவரம் சேர்ப்பதற்கான மையங்களாக உருவெடுத்துள்ளன. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் இதனையும் சேர்த்து மொத்தம் இத்தகைய 1435 மையங்கள் உள்ளன.
அஞ்சல் துறையின்ஆதார் பதிவு மற்றும் விவரங்கள் திருத்தும் மையங்களில் சிறப்பான மையங்களை அமைப்பதில் பாராட்டுதலுக்குரிய சேவையை கவுரவிக்க இந்திய தனித்தன்மை அடையாள ஆணையம் ஆதார் சிறப்பு விருதுகள் 2018-ல் ஏற்படுத்தியது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி புதுதில்லியில் 2018 ஜூலை 11-ந் தேதி நடைபெற்றது.
ஆதார் பதிவு மற்றும் திருத்த மையங்களை விரைவாக தொடங்கிய வட்டம் என்ற பிரிவில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு வட்டத்தின் சார்பில் சென்னை நகர மண்டலபோஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு. ஆர். ஆனந்த், அஞ்சல் துறை செயலாளர் திரு. ஏ.என்.நந்தாவிடமிருந்து இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது அஞ்சல் துறையின் செயல்பாட்டுத் துறை உறுப்பினர் திருமதி. உஷா சந்திரசேகர் இந்திய தனித்தன்மை அடையாள ஆணையம் அமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் அஜய்பூஷன்பாண்டே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விருதுகள் தவிர, நாட்டில் மண்டலத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் அதிகபட்ச ஆதார் பதிவு / திருத்தம் ஆகியவற்றை மேற்கொண்ட அஞ்சல் அலுவலகத்திற்கும் விருது வழங்கப்படுகிறது. சென்னை நகர மண்டலத்தில் தி.நகர் தலைமை அஞ்சல் அலுவலகம், மேற்கு மண்டலத்தில் (கோயம்புத்தூர்) சூராமங்கலம் தலைமை அஞ்சல் அலுவலகம்.
மத்திய மண்டலத்தில் (திருச்சி) திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சல் அலுவலகம் ஆகியவை இந்த விருதை பெற்றன. சம்பந்தப்பட்ட முதல் நிலை போஸ்ட்மாஸ்டர்கள் இதற்கான விருதுகளை11.07.2018 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றுக்கொண்டனர். 30.06.2018 வரை தமிழ்நாடு வட்டத்தில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ளனர். 80,000-க்கும் மேற்பட்ட ஆதார் விவரசேர்க்கைகள் நடைபெற்றுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.