சவுதி அரேபியாவில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி

ரியாத்: சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்ததை அடுத்து, மோட்டார் சைக்கிள் ஓட்ட அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

சவுதி அரேபியாவில் 'ஷரியத்' என்ற சட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தில் பெண்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தடையை மீறி கார் ஓட்டும் பெண்களை கைது செய்யவும், அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 27 ஆண்டுகளாக பெண்ணுரிமை சங்கங்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதித்திருந்த தடையை சவுதி அரேபிய அரசு நீக்கி உள்ளது. இதில், வரும் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதித்து மன்னர் முகமது பின் சல்மான் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என சவுதி அரேபிய நாட்டின் போக்குவரத்து துறை இயக்குனர் ஜெனரல் நேற்று அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டு வெளியிட்டார்.

மேலும் அதில் குறிப்பிடுகையில், “ இருபாலருக்கும் பொருந்தும் வகையில் மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். பெண்கள் ஓட்டும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் வேறு வகையில் இருக்கும். போக்குவரத்து விதிகளை மீறும் பெண்கள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் பெண் ஓட்டுனர்களை தண்டிப்பதற்கும், அபராதம் விதிப்பதற்கும் பெண்களால் நிர்வகிக்கப்படும் தனி அமைப்பு உருவாக்கப்படும்” என அதில் இருந்தது.

More News >>