குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக ட்ரம்ப்?- மோடி அழைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தினத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்ற ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர், ‘அதிபர் ட்ரம்ப், உங்கள் குடும்பத்துடன் நீங்கள் இந்தியாவுக்கு வர வேண்டும். உங்களை வரவேற்கும் பெருமையை எனக்கு நீங்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன்’ எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ட்ரம்ப்பின் ஆலோசகர்களில் ஒருவரும் மகளுமான இவான்கா ட்ரம்ப் இந்தியாவுக்கு வந்தார். இவான்கா, சர்வதேச தொழில் முனைவோர்களுக்கான மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார். இந்நிலையில், அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ட்ரம்ப் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பாராக் ஒபாமா, புது டெல்லியில் நடந்த சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதேபோல, 2014 ஆம் ஆண்டு, ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே மற்றும் 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே ஆகியோர் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.