நாட்டு மக்களையே வேவு பார்ப்பதா? கடிந்துகொண்ட உச்ச நீதிமன்றம்

தனி நபர்கள் பயன்படுத்தும் சமூக ஊடக கணக்குகளை கண்காணிக்க மத்திய அரசு சார்பில் ‘சோஷியல் மீடியா ஹப்’ என்ற சமூக ஊடக கண்காணிப்பு மையத்தை நாட்டின் பல்வேறு இடங்களில் உருவாக்க முயற்சித்து வரும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கடிந்துகொண்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மஹுவா மைத்ரா மத்திய அரசின் சோஷியல் மீடியா ஹப் திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மைத்ரா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி ஆஜரானார். அவர், ‘சோஷியல் மீடியா ஹப் என்னும் அரசின் எண்ணம் நிறைவேறினால், இந்தியாவில் யார் எங்கிருந்து எதை சமூக ஊடகங்களில் செய்தாலும் அதை மிகச் சுலபமாக ஊடுருவிப் பார்க்கும் நிலை உருவாகும்’ என்றார்.

ஆனால் அரசு தரப்பிலோ, ‘அரசின் பல்வேறு திட்டங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பிரசாரங்கள் மக்கள் மத்தியில் எப்படி சென்றடைகின்றன என்பதை தெரிந்து கொள்ளவே சோஷியல் மீடியா ஹப்-ஐ உருவாக்க நினைக்கிறோம். அதேபோல நாட்டு மக்கள் மத்தியில் எப்படி ஒரு பரந்துப்பட்ட தேசிய உணர்வை ஏற்படுத்துவது  என்பதையும் ஆராய்வோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று பேர் கொண்ட நீதிபதிகளுக்குக் கீழ் விசாரிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட பிறகு நீதிமன்றம், ‘நாட்டு குடிமக்களின் சமூக ஊடக கணக்குகளில் ஊடுருவி வேவு பார்க்க முயல்கிறதா அரசு? இது சர்வெய்லன்ஸ் செய்யும் பாணியை உருவாக்கும்’ என்று மத்திய அரசை விமர்ச்சித்துள்ளது. 

More News >>